சென்னை: பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு வயது 98.
இந்தியாவின் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய புகழ்பெற்றவரும், விவசாயத்தின் தந்தை என்று போற்றப்பட்டவருமான பிரபல விஞ்ஞானி, எம் எஸ் சுவாமிநாதன் காலமானார். வயது மூப்பு காரணமாக, சென்னையில் ஓய்வெடுத்து வந்த நிலையில், இன்று லை 11.20 மணிக்கு காலமானார்.
கும்பகோணத்தை சேர்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். 1925ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ந்தேதி கும்பகோணத்தைச் சேர்நத் டாக்டர் எம்.கே.சாம்பசிவன் பார்வதி தங்கம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு, அவர் வேளாண் அறிவியல் மற்றும் மரபியல் படிப்பைத் தொடர்ந்தார்.
விவசாயத்தின்மீது அதிக ஆர்வம் கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன், இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர். 1960 ஆண்டுகளில், விவசாயம் செழித்தோங்க, அதிக மகசூல் தரும் வகை விதைகள், இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணை கருவிகள், நீர்ப்பாசன முறைகள், களைக்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்ற புதுமைகளை புகுத்தியதுடன், வேலைவாய்ப்பு மூலம் இந்தியாவின் விவசாயம் ஒரு நவீன தொழில்துறை அமைப்பாக மாற்றி அமைத்த பெருமைக்கு உரியவர்.
மத்திய வேளாண்மைத் துறைச்செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர். வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்தவர். இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார்.
இவர் வயது மூப்பு காரணமாக, கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சென்னையில் காலாமானார்.
அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.