சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில்,  கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.  மீண்டும் வரும் 29ந்தேதி பந்த் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இனிமேல் தமிழ்நாட்டுக்கு, கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில்  தண்ணீர் திறக்க மாட்டோம் அம்மாநில துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவக்குமாா் தெரிவித்து உள்ளார்.

காவிரியில், தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்து விட  வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திறந்து விடாமல், தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள  குறுவை சாகுபடி தண்ணீரின்றி காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு மத்தியஅரசு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு மூலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், காவிரி ஆணைய உத்தரவின்படி தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்  தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  பின்னர்,  கடந்த 26ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்  நடத்தியதுடன் பல மாவட்டங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  இந்த நிலையில், கர்நாடக பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டு  வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மீண்டும் வரும் 29ந்தேதி (நாளை) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார்,  முழுஅடைப்பு நடத்தும்  முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன்,   தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால்,   மழை உள்ளிட்ட பிற காரணங்களால் இயல்பாகவே தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி  செல்லும்.  இன்னும் ஆயிரம் கனஅடி நீர் நாம் திறக்க வேண்டும். இந்த நீரை திறக்க மாற்று ஏற்பாடு செய்வோம் என்றார்.

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகம்  வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிடக் கோரியது. ஆனால், தமிழ்நாடு கேட்ட அளவு நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று ஒழுங்காற்று குழு ஏற்கனவே கூறி, தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க மீண்டும் ஒரு முறை முழு அடைப்பு நடத்துவது ஏன்? என கேள்வி எழுப்பியவர், இனிமேல், எக்காரணம் கொண்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு  காவிரி நீர் திறக்கமாட்டோம் என்று உறுதி அளித்தார்.

கர்நாடக அமைப்புகள்  நாளை ( 29-ந் தேதி) மீண்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வா்த்தகம் பாதிக்கும். பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.