“இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக” பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களில் சிலர் ரஷ்யாவில் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏஜெண்டுகளால் தூண்டப்பட்டு ரஷ்யா சென்று சிக்கிய உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா திரும்ப அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர்.

இதுகுறித்து தி இந்து நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில், நவம்பர் 2023 முதல், ரஷ்யா-உக்ரைன் எல்லையில் உள்ள மரியுபோல், கார்கிவ், டொனெட்ஸ்க், ரோஸ்டோவ்-ஆன்-டான் ஆகிய இடங்களில் சுமார் 18 இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர், மேலும் நடந்து வரும் போரில் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

2022 இல் உக்ரைனில் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்ட சர்வதேச படையில் ஒரு சில இந்தியர்கள் இருந்ததாக அப்போது தகவல் வெளியானது இருந்தபோதும் ரஷ்யா தரப்பில் இந்தியர்கள் போரில் ஈடுபடுத்தப்படுவது முதல்முறையாக தெரியவந்துள்ளது.

இவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கையாள்வதில் “ரஷ்ய இராணுவத்தால்” அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டதாகவும், மேலும் ஜனவரியில் ரஷ்யா-உக்ரைன் எல்லையில் ரோஸ்டோவ்-ஆன்-டான் துப்பாக்கிகளுடன் போர்க்களத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் பலியானவர்களில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவரின் குடும்பத்தினர் ஜனவரி 25 அன்று ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசியை அணுகியுள்ளனர். இதுகுறித்து ஒவைசி வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

பலியானவர்களில் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாதம் ₹1.95 லட்சம் சம்பளமும், ₹50,000 கூடுதல் போனஸும் தருவதாகக் கூறி இந்திய இளைஞர்களை அழைத்துச் சென்ற முகவர்கள் இரண்டு மாதத்திற்கான போனஸ் ₹50,000 தவிர வேறு பணம் தரவில்லை என்று கூறும் இவர்கள் நவம்பர் 2023ல் அங்கு சென்றதாகவும் இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக பணியமர்த்தப்படுவதாகவும் போராட்டக் களத்திற்கு அனுப்புவதில்லை என்று முகவர்கள் கூறியதை நம்பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் கூறுகின்றனர்.

“பாபா வ்லாக்ஸ்” என்ற யூ டியூப் சேனலை நடத்தி வரும் பைசல் கான் என்ற முகவர் உதவியுடன் ரஷ்யாவிற்கு வந்ததாக உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தி இந்து நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

சண்டையிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதை அடுத்து முகவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போன நிலையில் போராட்ட களத்தில் இருந்து தப்பி வந்த நிலையில் தங்கள் குடும்பத்தினரை அழைத்து நடந்ததை கூறியதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. முறையான ஆவணங்கள் மற்றும் பணமும் இல்லாத நிலையில் தூதரக அதிகாரிகள் பலமுறை தங்களை திருப்பி அனுப்பியதாக கூறிய அவர்கள் இந்தியா திரும்ப அரசு தங்களுக்கு உதவவில்லை என்று கூறியுள்ளனர்.