டில்லி

டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நொய்டா மற்றும் காசியாபாத்  செல்ல ரூ.10000 கட்டணத்தில் உ பி போக்குவரத்து கழகம் டாக்சிகளை இயக்குகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விமானச் சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.  இதனால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.   ஊரடங்கு இரண்டாம் முறையாக நீட்டிக்கப்பட்ட போது இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர அரசு முடிவு செய்து வந்தே பாரத் மிஷன் என்னும் திட்டம் தொடங்கப்பட்டு அவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இவர்கள் டில்லியில் இருந்து செல்ல வசதியாக உத்தரப் பிரதேச அரசுப் போக்குவரத்துக் கழகம் வசதிகளை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.  மக்களின் வசதிக்காக அமைத்துள்ளதாக உ பி அரசால் கூறப்படும் இந்த வசதிக்காக மக்கள் குறைந்த கட்டணம் ரூ.10000 முதல் ரூ. 12000 வரை செலுத்த வேண்டி உள்ளது.  இதைப் போல் பேருந்துக்குக் குறைந்தது ரூ.1000 முதல் ரு.1320 வரை 100 கிமீக்குச் செலுத்த வேண்டி உள்ளது.

உபி அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜசேகர், மே மாதம் 9 ஆம் தேதி அன்று வெளியிட்ட அறிவிப்பில் “வந்தே மாதரம் மிஷன் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இந்திய மக்களுக்கு உள்நாட்டுப் பயண உதவிக்காக உ பி அரசு சில வசதிகளை செய்துள்ளது  அதன்படி டில்லியில் இருந்து நொய்டா, காசியாபாத் போன்ற பகுதிகளுக்கு நாங்கள் பேருந்து மற்றும் டாக்சிகளை இயக்கி வருகிறோம்.

இந்த வசதிகளைப் பெற விரும்புவோர் கோவிட் 19 பாதிப்பு இல்லாதவராக இருக்க வேண்டும்.   அத்துடன் டில்லி அரசு பயண அனுமதி அளித்திருக்க வேண்டும்.

விமான நிலையத்தில் இருந்து சாதாரண கார்களுக்கு குறைந்தது 250 கிமீ செல்ல ரூ.10000 கட்டணம் வசூலிக்கப்படும்.  இதுவே சொகுசுக்காராக இருந்தால் ரூ.12000 கட்டணம் வசூலிக்கப்படும்.   அதற்கு மேல் உள்ள தூரத்துக்கு சாதாரண கார்களுக்கு கிமீக்கு ரு. 40 உம் சொகுசுக் கார்களுக்கு கிமீக்கு ரூ. 50உம் வசூலிக்கப்படும்.   ஒரு டாக்சியில் ஓட்டுநரைத் தவிர இருவர் மட்டுமே செல்ல வேண்டும்.

இதை போல் ஏசி வசதி இல்லாத பேருந்துக் கட்டணம் 100 கிமீ வரை செல்ல ரூ.1000 மற்றும் ஏசி வசதி உள்ள பேருந்துக் கட்டணம் 100 கிமீ வரை செல்ல ரூ. 1320 வசூலிக்கப்படும்.  அதற்கு மேல் செல்லும் 101-200 கிமீ வரை உள்ள தூரத்துக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.  சமூக இடைவெளி காரணமாக ஒரு பேருந்தில் 26 பேருக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி உண்டு.

மேலும் அரசின் தற்போதைய உத்தரவுப்படி வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.  எனவே தனிமைப்படுத்தலை முடித்தவர்களுக்கு மட்டுமே இந்த போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும் ” என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த அறிவிப்பில் கட்டணம் மிக அதிகமாக உள்ளதற்கு எவ்வித காரணமும் கூறப்படவில்லை.

இது குறித்து, ”வெளி மாநில தொழிலாளர்களுக்காக அரசால் இலவச பேருந்துகள் விடப்பட்டு வருகின்றன.  அதே வேளையில் வெளி மாநிலத்துக்கு வருவோருக்கு  அதிக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.  இதற்கு முன்பு டில்லியில் இருந்து நொய்டா, காசியாபாத் செல்ல ரூ.800 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தன  ஏற்கனவே வெளி நாட்டில் துயர் அனுபவித்துவிட்டு இங்கு வருவோரிடம் இவ்வாறு கட்டணம் வசூலிப்பது சரி அல்ல” என வெளிநாடு வாழ் இந்தியர் சங்க தலைவ்ர் ஜெயின் கூறி உள்ளார்.,