சுயமரியாதையை இழந்து வாழ்வதில் அர்த்தமில்லை… கடுமையாக உழைத்து பெற்ற பதக்கங்களை கங்கை நதிக்கு அர்பணிக்கிறோம் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.

இன்று மாலை 6 மணிக்கு கங்கையில் கலக்கப்போவதாக இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் எங்கள் வீட்டு மகள்கள் என்று அழைக்கும் பிரதமர் மோடிக்கு ஒருமுறை கூட எங்களுக்காக செவிகொடுக்கக்கூட மனம் ஒப்பவில்லை.

மாறாக புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை நடத்தி கொடுங்கோல் ஆட்சி இது என்பதை உணர்த்தியிருக்கிறார்.

அதேபோல் பெண்ணாக இருந்து கொண்டு இரண்டு கி.மீ. தூரத்தில் போராடி வரும் எங்களுக்காக குடியரசு தலைவருக்கும் மனமிறங்கவில்லை.

தேர்தல் நேரத்தில் வாக்குவங்கி அரசியலுக்காக மட்டும் தேவைப்படுபவர்களாக நாங்கள் மாறிவிட்டோம்.

இந்தச் சுரண்டலுக்கு எதிராகப் பேசினால் எங்களை சிறையில் அடைக்கிறார்கள்.

நாங்கள் பெற்ற பதக்கங்கள் எங்கள் கடுமையான உழை்பிற்கு கிடைத்த வெகுமதி. இது இந்த தேசத்திற்குச் சொந்தமானது.

இதை வைப்பதற்கு சரியான இடம் கங்கை நதி. எங்கள் பதக்கங்கள் எங்களுக்கு எவ்வளவு புனிதமானதோ அதைவிட புனிதமானது கங்கை நதி. அதனால் நாங்கள் பெற்ற பதக்கங்கள் அனைத்தையும் கங்கையில் கொட்ட முடிவெடுத்துள்ளோம்.

ஒலிம்பிக், ஆசிய போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற தருணங்களையும் மே 28 அன்று இந்த நாடே பார்க்க எங்கள் அனைவரையும் காவல்துறையினர் கொடூரமாக கைது செய்த தருணத்தையும் நினைத்துப் பார்க்கிறோம்.

மல்யுத்த சம்மேளன அமைப்பில் நடைபெறும் மோசமான சம்பவங்களை எதிர்த்து அமைதியாக போராடி வந்த எங்களை குற்றவாளியாக்கி தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் ஏளனப் பொருளாக மாற்றப்பட்டுள்ளோம்.

சுயமரியாதையை இழந்து வாழ்வதைவிட எங்கள் கழுத்தை அலங்கரித்த பதக்கங்களை கங்கையில் கொட்ட முடிவெடுத்துள்ளோம்.

பதக்கங்கள் எங்களது உயிர், ஆன்மா அவை கங்கையில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு நாங்கள் வாழ்வதில் அர்த்தமில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.