சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் முத்தரப்பு டி-20 தொடரில், தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது இந்திய மகளிர் அணி.

டாஸ் வென்ற இந்திய கேட்படன் ஹர்மன் ப்ரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்கு ஆட்டம் நினைத்தது மாதிரி அமையவில்லை. அந்த அணியில், கேப்டன் ஹெதர் நைட் 44 பந்துகளில் 67 ரன்களும், பியூமண்ட் 37 ரன்களும் அடித்து கைகொடுத்த அளவிற்கு மற்ற வீராங்கனைகளால் சோபிக்க முடியவில்லை.

முடிவில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது இங்கிலாந்து. இந்திய பவுலர்களான ராஜேஸ்வரி, ஷிகா, தீப்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 147 என்ற சாத்தியமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ஷபாலி 30 ரன்களையும், ஜெமிமா 26 ரன்களையும் அடித்தனர்.

இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட, ஓவரின் 3வது பந்தில் கேப்டன் ஹர்மன் ஒரு சிக்ஸ் அடித்து வெற்றி தேடி தந்தார். அவர் அணிக்காக எடுத்த ரன்கள் 42.

முடிவில், இந்திய அணி, 5 விக்கெட்டுகளை இழந்து, 19.3 ஓவர்களில் 150 ரன்களை எடுத்து வென்றது. இத்தொடரில் பங்கேற்கும் மற்றொரு அணி ஆஸ்திரேலியா.