லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனின் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணாக்கர் எண்ணிக்கை 34.7% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2018-19ம் ஆண்டில், லண்டன் பல்கலைகளில் 125035 வெளிநாட்டு மாணாக்கர்கள் பயில்வதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த 2017-18ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8% அதிகமாகும்.

இந்நிலையில், லண்டன் பல்கலைகளில் பயிலும் இந்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை 34.7% அதிகரித்துள்ளதாக அந்த விபரங்களிலிருந்து தெரியவருகிறது.

அதேசமயம், இந்த விஷயத்தில் முன்னிலை வகிப்பது சீனா. அந்நாட்டு மாணாக்கர்களின் எண்ணிக்கை 25650. இரண்டாமிடத்தில் அமெரிக்கா வருகிறது.

இதனையடுத்து, மூன்றாமிடத்தில் நிற்கிறது இந்தியா. முன்பு, இந்தியா நான்காமிடத்தில் இருந்தது. பிரிட்டன் அரசின் புதிய விசா கொள்கையால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.