மும்பை: முக்கிய ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் காயத்திலிருந்து மீளாமலிருக்கும் நிலையில், மே 22ம் தேதி இந்திய அணி இங்கிலாந்திற்கு புறப்பட்டு செல்லும் நேரத்தில்கூட, கேதார் ஜாதவ் விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேதார் ஜாதவின் உடல் தகுதி குறித்த தகவல்கள் அவ்வப்போது கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவினருக்கு தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டே வருகிறது. எனவே, மாற்று வீரரை அறிவிக்கும் கடைசி கால அவகாச தேதியான மே 23ம் தேதிவரை கூட, இந்திய தேர்வு கமிட்டி இந்த விஷயத்தில் எதுவும் முடிவு செய்யாது என்றே தெரிகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி, ஒரு வீரருக்கான மாற்று வீரரை அறிவிப்பதற்கான கடைசி தேதி மே 23 என்பது கவனிக்கத்தக்கது.

ஒருவேளை, கேதார் ஜாதவ் நிலைமை சரியாகவில்லை என்றால், அவருக்குப் பதிலாக அம்பதி ராயுடு, அக்ஸார் படேல் போன்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கணக்கில் எடுக்கப்படுவரா? அல்லது ரிஷப் பண்ட், இஷாந்த் சர்மா அல்லது நவ்தீப் சைனி ஆகிய மூவரில் ஒருவர் கணக்கில் எடுக்கப்படுவரா? என்ற யூகங்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன.