40 வயதுக்கு மேற்பட்ட அதிக ஆபத்துள்ள மற்றும் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கோவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை இந்திய மரபணு விஞ்ஞானிகள் பரிந்துரைத்திருக்கின்றனர்.
கோவிட்-19 குறித்த மரபணு மாறுபாடுகளைக் கண்காணிக்க அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தேசிய சோதனை ஆய்வகங்களின் வலையமைப்பான இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் சீக்வென்சிங் கன்சார்டியத்தின் (INSACOG) வாராந்திர இதழில் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது.
“தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அதிக ஆபத்து உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது, அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலிக்கலாம்”என்று INSACOG அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
“தற்போதுள்ள தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய தன்மை மிகவும் குறைவாக இருப்பதாலும், ஒமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வைரஸை சமாளிக்க போதுமானதாக இந்த தடுப்பூசிகள் இருக்குமா என்பது சந்தேகமே” என்று தெரிவித்துள்ளது “இருப்பினும் நோயின் கடுமையான ஆபத்தைக் குறைக்க உதவலாம்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் தேவை குறித்த கோரிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் இந்திய விஞ்ஞானிகளின் இந்த பரிந்துரை வந்துள்ளது.
நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வந்தவர்களின் கோவிட் தொற்று குறித்த தடமறியவும் மற்றும் சோதனையை அதிகரிக்க வேண்டும் எனவும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.