நியூட்ரினோ திட்டத்தை இந்திய விஞ்ஞானிகளே எதிர்க்கிறார்கள்!:  பிரபல விஞ்ஞானி பத்மநாபன்

Must read

தேனி:

நியூட்ரினோ திட்டத்தை விஞ்ஞானிகளே எதிர்த்து வருகிறார்கள் என்று பிரபல விஞ்ஞானியான பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள போடி தொகுதியில் உள்ள பொட்டிபுரம், அம்பரப்பர் மலையில் நியுட்ரினோ ஆய்வுத்திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்தது. இதற்கான பணிகளையும் ஆரம்பித்தது.

இதற்கு தென் மாவட்ட மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவியது. மேலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், இத்திட்டம் இப்பகுதியில் கொண்டு வரப்பட்டால், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு, உயிருக்கு ஆபத்தும் ஏற்படும் என்று தெரிவித்தார். மேலும், சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில் இது குறித்து வழக்குத் தொடர்ந்து நியுட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடையும் பெற்றார்.  அதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக,  இத்திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது.

இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மீண்டும் நியுட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து செயலில் இறங்கியது.  இதையடுத்து  இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார் வைகோ.

மேலும் கடந்த 31ம் தேதி மதுரையில் நடைபயணத்தை தொடங்கிய வைகோ உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, போடி, சின்னமனூர், போடி, பாளையம் கூடலூர் முதல் குக்கிராமங்கள் வரை சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள   பொதுமக்கள், வைகோவை வாழ்த்தினர். நியூட்ரினோ குறித்து மக்களுக்கு விளக்கிய இந்த நடைபயணம் கடந்த 10ம் தேதி கம்பம்  வந்தடைந்து நிறைவு பெற்றது.

நியூட்ரினோ திட்டம் மூலம் வரும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் பேசுவதன் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வைகோ கருதினார். இதையடுத்து கேரள மாநிலம், கொச்சியில் உள்ள பிரபல விஞ்ஞானியான பத்மநாதனை அழைத்து வந்து கம்பத்தில் இறுதியாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேச வைத்தார்.

அதில் பேசிய விஞ்ஞானி பத்மநாதன், இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளும் தமிழகத்தில் உள்ள விஞ்ஞானிகளும் இத்திட்டம் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துத்தான் வருகிறார்கள் என்று கூறினார்.

மேலும், “இந்த நியூட்ரினோ திட்டம் வறண்ட பகுதிகளில் அமைக்க வேண்டும் ஆனால் இத்திட்டம் அமைய போகும் இந்த தேனி மாவட்டமும், அதை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டமும் வளமான பகுதிகள். இங்கே  மக்கள் அடர்த்தியாக வாழ்கிறார்கள். மேலும், முல்லைப் பெரியாறு அணை இடுக்கி அணை உள்பட 18 அணைகள் இப்பகுதியில் இருக்கின்றன.

இந்த நிலையில் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்காக அந்த அம்பரப்பர் மலையில் இரண்டு லட்சத்தில் அதிகமான வெடி பொருட்களை வைத்து பாறைகளை தகர்க்கும்  முயற்சி நல்லதல்ல. இதனால், இங்குள்ள முல்லைப் பெரியாறு மற்றும் இடுக்கி அணை உள்பட அனைத்து அணைகளும் உடைந்து பெரும் ஆபத்து ஏற்படும். அதோடு நியூட்ரினோ ஆய்வு மையத்தில் இருந்து வெளிவரும் தண்ணீரில் அறுபது வேதிப் பொருட்கள் கலந்திருக்கும்.  அந்த தண்ணீர் நிலத்தடிக்கு போகும்போது, நிலத்தடி நீரும் மாசடையும். பிறகு அத்தண்ணீரை பயன்படுத்த முடியாதும். ஆகவே விவசாயம் அழிவதோடு, மக்கள் குடிநீருக்கும் அல்லாட வேண்டியிருக்கும்.

இன்னொரு ஆபத்து… ஆய்வுகூடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அது பூகம்பமாக மாறி, தமிழகம், கேரளா மாநிலத்தையே சுடுகாடாக மாற்றிவிடும். இதெல்லாம் மத்திய அரசுக்குத்தெரியும். அப்படியும் ஏன் இத்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது என்று தெரியவில்லை!” என்று விஞ்ஞானி பத்மநாபன் தெரிவித்தார்.

பத்மநாதன் ஆங்கிலத்தில் பேசியதால் அதை ஒருவர் தமிழாக்கம் செய்தார். அவர்  சரிவர தமிழாக்கம் செய்யவில்லை. உடனே மேடையில் இருந்த வைகோ தானே எழுந்து விஞ்ஞானியின் ஆங்கில பேச்சுக்கு தமிழாக்கம் செய்து அதை உணர்ச்சிப்பூர்வமாகவே கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article