சென்னை:

பிரதமர் மோடி நாளை சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள  வருவதையொட்டி கிண்டி குழந்தைகள் பூங்காவுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சி தொடக்கம்  மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாளை சென்னை வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என திமுக உள்பட எதிர்க்கட்சிகள் அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மோடி பயணத்திற்கு ஏதுவாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மதில் சுவரும் இடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவையும் பாதுகாப்பு கருதி மூட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி  மோடி நாளை  கேன்சர் மருத்துவமனை வருகையையொட்டி, கிண்டி குழந்தைகள் பூங்காவில் நாளை பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தற்போது பள்ளித் தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறையை கழிக்க சிறுவர் பூங்காவுக்கு சிறுவர்கள் குவிந்து வரும் வேளையில், மோடியின் பாதுகாப்பு என கூறி நாளை மூடுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.