டில்லி,

நாடுமுழுவதும் நஷ்டத்தில்  இருக்கும் ரெயில்வே வழித்தடங்கள், ரெயில்கள், இருப்புப்பாதை களை கார்ப்பரேட்   நிறுவனங்களுக்கு குத்தகைக்கு(லீஸ்) விட ரெயில்வே துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ரெயில் வழிப்பாதையைக் கொண்டுள்ளது இந்திய ரெயில்வே. மத்திய பாரதிய ஜனதா அரசு பொதுத்துறையான ரெயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளது.

முதலில் கை வைக்கப்போவது, தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரியமான ஊட்டி ரெயில்.  இந்த ரெயில், பாதை பராமரிப்பு, டிக்கெட் கட்டணம், இயக்குதல், பணியாளர் மேலாண்மை உள்ளிட்டவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக ரெயில்வே நஷ்டத்தில் இருந்து தப்பிக்கவும்,  தேவையில்லாத செலவுகளை குறைக்கவும், ஆட்குறைப்பு மேற்கொள்ளவும் ரெயில்வே துறை இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

மேலும் நஷ்டத்தில் இயங்கும் கல்கா, சிம்லா,  சிலிகுரி, டார்ஜ்லிங், நீலகிரி, இமயமலையில் உள்ள காங்கரா வேலி, மராட்டியத்தில் உள்ள நீரல் மற்றும் மாதரேயன் உள்ளிட்ட  ரெயில் பாதைகள் மற்றும்  ரெயில்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படுகிறது.

இதுகுறித்து ரெயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது,

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இயக்கப்பட்டுவரும் மலைரெயில்கள் நஷ்டத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பராமரிப்பு செலவும், இயக்கும் செலவும் மிக அதிகம். இவற்றால், ரெயில்வே துறைக்கு லாபம் ஏதும் இல்லை.

ஆதலால், இந்த ரெயில்பாதைகள், ரெயில் இயக்குதல், பராமரிப்பு, பாதைகள் பராமரிப்பு ஆகியவற்றை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

குத்தகைக்கு விட முடிவு செய்துள்ள மலைப்பாதைகள் அனைத்தும் யுனெஸ்கோ அறிவித்த சர்வதேச வழித்தடங்களாகும்.

ரெயில்வே துறையில் நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ. 33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும்.

முதல்கட்டமாக, ஒருசில வழித்தடங்களை தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அதில் திருப்தி ஏற்பட்டால்,  ரெயில்வே துறை முழுவதும் தனியாருக்கு கொடுக்கப்படும் என்றார்.

ஏற்கனவே, நிதி ஆயோக் உறுப்பினர் பிபெக் டெப்ராய் தலைமையிலான குழு ரெயில்வேயை தனியாருக்கு கொடுக்கலாம் என்றும்,  ரெயில்வேக்கு தனி பட்ஜெட் தேவை இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிதிஆயோக் ஆலோசனைபடி இந்த ஆண்டு ரெயில்வேக்கு என தனி பட்ஜெட் கிடையாது. பொது பட்ஜெட் உடனே ரெயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டுள்ளது.