கொல்கத்தா:

மனைவி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது நீதிமன்றத்தில் கொல்கத்தா போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.


இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல குற்றச்சாட்டுகளை கூறினார்.

ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பிருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் ஹசின் ஜகான் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக கொல்கத்தா போலீஸில் புகாரும் அளித்திருந்தார். அதில் குடும்பத் தகராறு மற்றும் பாலியல் சித்ரவதை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான குற்றப்பத்திரிகையை அலிபூர் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர்.
இதனை சட்டப்படி சந்திப்போம் என ஷமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், முகமது ஷமிக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, பாகிஸ்தான் பெண் ஒருவரிடம் பணம் பெற்றதாக, ஷமி மீது அவரது மனைவி சுமத்திய ஊழல் குற்றச்சாட்டில், இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது.

எனினும், இந்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ஷமி மீதான நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றது.