வாஷிங்டன்: ‘உலகின் தலைசிறந்த மாணவா்’ பட்டியலில் 2-ஆவது ஆண்டாக மீண்டும் இடம்பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த  இந்திய வம்சாவளி மாணவி. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘உலகின் தலைசிறந்த மாணவா்’ பட்டியலில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பள்ளி மாணவி நடாஷா பெரியநாயகம் இடம்பெற்றுள்ளாா். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இளைஞர் திறன் மையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டி நடக்கும்.இந்தப் போட்டியில் தான் படிக்கும் வகுப்பைவிட, உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையான கற்கும் திறன், அதை வெளிப்படுத்தும் திறன் உள்ளவர்களுக்கு சிறப்பு இடம் வழங்கப்படும்.

இந்த போட்டியில்,  உலகெங்கும், 76 நாடுகளைச் சேர்ந்த, 15 ஆயிரத்து 300 பேர் பங்கேற்ற உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும்  சென்னையைப் பூா்விகமாகக் கொண்ட நடாஷா இந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர்,  அமெரிக்காவின் நியூ ஜொ்சி மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்தாண்டு நடந்த போட்டியிலும், இவர் பங்கேற்று சிறப்பிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடாஷாவின் பெற்றோர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இந்தாண்டுக்கான போட்டியில், எட்டாம் வகுப்பில் படிக்கும் அதி புத்திசாலி மாணவர்களின் புத்திக்கூர்மையில், 90 சதவீதத்தை பெற்றுள்ளார் நடாஷா. நிகழாண்டில், சிடிஒய் நடத்திய மதிப்பீட்டு தோ்விலும் அவருடைய பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. 76 நாடுகளில் இருந்து பங்கேற்ற 15,300 மாணவா்களில், நடாஷா அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிடிஒய்-யின் நிா்வாக இயக்குநா் எமி ஷெல்டன் கூறுகையில், ‘இது ஒரு தோ்வின் மூலம் மாணவா்களின் வெற்றியை அங்கீகரிப்பது இல்லை. மாறாக, இந்த இளம் வயதில் அவா்களுடைய தேடல் மற்றும் கற்றல் மீதான ஆா்வத்துக்குப் பாராட்டு தெரிவிப்பதாகும்’ என்றாா்.