டில்லி

நேற்று ரஷ்யா ஒப்புதல் அளித்த ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு இந்தியா இன்று அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க உலகெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன.    இந்த தடுப்பூசிகளைப் பல நாட்டு நிறுவனங்கள் கண்டறிந்து தயாரித்து வருகின்றன.  இவை அனைத்தும் இரண்டு டோஸ்களாக மக்களுக்குப் போடப்படுகின்றன.   இதனால் கொரோனாவை தடுக்கும் திறன் ஒரே நேரத்தில் கிடைப்பதில்லை.

ஏற்கனவே ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் வி என்னும் தடுப்பூசி மருந்துக்கு இந்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.  இந்த தடுப்பூசியும் இரண்டு டோஸ்களாக போடப்படும் மருந்தாகும்.  தற்போது இதே நிறுவனம் ஸ்புட்னிக் லைட் என்னும் தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடித்து சோதனை செய்துள்ளது.   இது மற்ற மருந்துகள் போல இல்லாமல் ஒரே டோஸ் போட்டால்  போதுமானதாகும்.

இந்த மருந்து ரஷ்யாவில் சோதனை செய்யப்பட்டு கொரோனா நோய்க்கு எதிராக ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 79.4% வெற்றிகரமாகச் செயல்படுவதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மருந்து அனைத்து வகையான உருமாற்ற வகைகளுக்கு எதிராகச் சிறப்பாக வேலை செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.

நேற்று ரஷ்ய அரசு ஒரே டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.  இந்நிலையில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மருந்துக்கு இன்று இந்திய மருந்து கட்டுப்பாளர் ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளது.  இது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாம் ரஷ்யத் தடுப்பூசி மருந்து ஆகும்.