ராமேஸ்வரம்: நடுக்கடலில் தத்தளித்த 11 தமிழக மீனவர்களை மீட்டது இந்திய கடற்படையைச்சேர்ந்த  விக்ரம் ரோந்து  கப்பல் மீட்டு வந்தது. இதையடுத்து, கடற்படை  அதிகாரிகள், வீரர்களுக்கு தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இதை தடுக்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்க முடியாத நிலை தொடர்கிறது.

இதற்கிடையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 விசைப்படகு ஒன்றின் மூலம் , அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கடந்த 5-ந்தேதி அவர்களது விசைப்படகின் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக 11 தமிழக மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களால் உதவி கோர முடியாத நிலையில் இருந்தனர்.

இந்த நிலையில்,  அந்த வழியாக சென்ற இந்திய கடலோர காவல் படையினர் விக்ரம் ரோந்து கப்பல்,  நடுக்கடலில் மீனவர்களின் படகு தத்தளிப்பதை கண்டதும், அருகே சென்று விசாரித்தனர். அப்போது,  தமிழக மீனவர்கள் நடுக்கடலில் பரிதவிப்பதை கண்டுபிடித்ததுடன், மீனவர்களின்  மீன்பிடி விசைப்படகின் என்ஜின் கோளாறை சரி செய்ய கடலோர காவல் படை வீரர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து விக்ரம் ரோந்து கப்பல் மூலம் 280 கடல் மைல் தொலைவுக்கு விசைப்படகை இழுத்து வந்து லட்சத்தீவின் மினிக்காய் தீவில் உள்ள இந்திய கடலோர காவல் படை தளத்தில் ஒப்படைத்தனர். அங்கு விசைப்படகு என்ஜின் கோளாறை சரி செய்யும் பணி நடைபெறுகிறது.

இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், விசைப்படகு என்ஜின் கோளாறால் நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்களை மீட்டு லட்சத்தீவின் மினிக் காய் தீவில் உள்ள கடலோர காவல் படை தளத்தில் ஒப்படைத்தோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக விசைப்படகையும், தமிழக மீனவர்களையும் மீட்டபோது எடுத்த புகைப் படங்களையும் கடலோர காவல் படை சமூக வலை தளத்தில் வெளியிட்டு உள்ளது.

இதையடுத்து, இந்திய கடற்படை அதிகாரிகளின் நடவடிக்கை சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.  நடுக்கடலில் தங்களை மீட்ட கடலோர காவல் படை அதிகாரிகள், வீரர்களுக்கு தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

அரபிக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் விக்ரம் ரோந்து கப்பல், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் டிரோன் தாக்குதலுக்கு உள்ளான இந்திய சரக்கு கப்பலை, வெற்றிகரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.