இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான சாந்தனை மீண்டும் இலங்கை அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் அதற்கான தற்காலிக பாஸ்போர்ட்டை சாந்தனுக்கு வழங்கியுள்ளார்.

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற மனிதவெடிகுண்டு தாக்குதலில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கைதான நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் 32 ஆண்டுகள் ஆயுள் தண்டனைக்குப் பின் 2022 டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை இலங்கைக்கு திரும்பி அனுப்ப தேவையான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.

இந்த நிலையில், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது மகன் சாந்தனை இலங்கை அழைத்து வர வேண்டும் என்று சாந்தனின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து சாந்தன் இலங்கை செல்ல தேவையான தற்காலிக பாஸ்போர்ட்டை அந்நாட்டு அரசு வழங்கி இருக்கிறது.

இதனால் இலங்கையைச் சேர்ந்த மற்றவர்களும் முருகனின் மனைவி நளினியும் விரைவில் இலங்கை செல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.