சென்னை:  ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் என  சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு  தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு சென்னையின் முக்கியமான பகுதியான மவுன்ட் ரோடு, கடற்கரை சாலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முன்வந்தது. சென்னை தீவுத்திடலை சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடந்த தமிழக அரசு திட்டமிட்டது. தற்காக சாலைகளில் மற்றும் நீர் நிலைகளில் மாற்றம் செய்து விறுவிறுப்பாக  ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில்,  சென்னையில் கொட்டிய மழை காரணமாக, நீர் வெளியேற சிரமம் ஏற்பட்டது. இதனால் சர்ச்சை எழுந்தது. மேலும் நன்றாக இருந்த சாலைகள்,  சாலையோர பகுதிகள் தகர்தெடுக்கப்பட்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. அத்துன் போக்குவரத்து மாற்றம் காரணமாகவும், சென்னை மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வில்  ஏற்கனவே விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத், ‘‘ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை உள்ளபகுதியில் இந்த கார் பந்தயம் நடப்பதால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும்’’ என வாதிடப்பட்டது. மேலும்,‘‘ராணுவம், கடற்படை மற்றும் துறைமுகம் ஆகியவற்றின் அன்றாட பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் இதற்கான முன் அனுமதியும் பெறவில்லை’’ என குற்றம்சாட்டினார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த கார் பந்தயத்துக்காக பெற்ற முன் அனுமதிக்கான ஆவணங்களை தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, இந்த பந்தயத்துக்காக பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட முன் அனுமதிக்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர். மேலும், இந்த கார் பந்தயம் டிச.9 மற்றும் 10-ம் தேதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே நடத்தப்படும். அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படும். ராணுவம், கடற்படை மற்றும் துறைமுக அதிகாரிகளுடன் ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இந்த கார் பந்தய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கார் பந்தயம் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தது.  இதனால் கார் பந்தயத்துக்காக செலவு செய்யப்பட்ட மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில்,  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,  பந்தயம் நடத்த ரூ.40 கோடியை அரசு செலவு செய்வது தவறு என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கார் பந்தயம் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று நீதிபதிகள் அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்; மழை, வெள்ளம் காரணமாக இந்த கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திற்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கார் பந்தயம் நடத்துவதற்காக ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால் அந்த இடத்தை கடக்கும்போது ஒளி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும். அதற்கான அனுமதி மருத்துவமனை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் மீது பிப்ரவரி 16ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்