சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக “நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு  தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில்,  இதுதொடர்பாக உரிய  நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 4 முறை சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளோம். பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்து தருவது குறித்து எதிர்கட்சித்தலைவர் தொடர்ந்து சட்டபேரவையில் தெரிவித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து ஆவணம் செய்ய வேண்டும்” என உரிமை யோடு சபாநாயகரிடம் வலியுறுத்துவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.