சென்னை

ந்திய ராணுவ வீரர்களுக்கு அதிகாரிகளாக இரு கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்திய ராணுவத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் வெகுநாட்களாக ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தார். அதை ஒட்டி இந்திய ராணுவம் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

ராணுவ அதிகாரிகளுக்கு கல்வி தகுதி மற்றும் பயிற்சி ஆகியவை வீரர்களை விட அதிகமாக தேவைப்படுகிறது. எனவே அதை வழங்க ராணுவ நிர்வாகம் முடிவு செய்தது.   சென்னையில் முதலில் இந்த பயிற்சி முகாம் நடத்த தீர்மானம் செய்யப்பட்டது.   அதை ஒட்டி முதற்கட்டமாக சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் 200 ராணுவ வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த மையத்தில் இவர்களுக்கு செப்டம்பர் முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சுமார் ஐந்து மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கு பிறகு எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் அதன் பிறகு நேர்காணலில் பங்கு பெற வேண்டும்.  நேர்காணலிலும் தேர்ச்சி பெற்றோர் டேராடூனில் உள்ள ராணுவ அதிகாரிகள் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

அந்த கல்லூரியில்  மூன்று ஆண்டுகள் நடைபெறும் கல்வி மற்றும் இதர பயிற்சிகள் மூலம் அவர்கள் அதிகாரி பதவிக்கு தகுதி செய்யப்படுவார்கள். அதன் பிறகு ஒரு வருடம் மீண்டும் பயிற்சிக்கு பிறகு தேர்வு பெறுவோர் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்படுவார்கள்.

இந்திய ராணுவத்தின் இந்த அறிவிப்பு அதிகாரிகள் ஆக விரும்பும் பல ராணுவ வீரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.