2019ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று 3 பேருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டது. இதில், இந்தியாவை பூர்விகமாக கொண்ட அபிஜித் பானர்ஜியும் ஒருவர். இவருடைய பொருளாதார ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த அவரது, 2வது மனைவி உள்பட 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அபிஜித் பானர்ஜி யார்?

கடந்த 1961ம் ஆண்டு பிப்ரவரி 21ந்தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர் அபிஜித் பானர்ஜி, தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று  வசித்து வருகிறார், அபிஜித் பானர்ஜிக்கு தற்போது வயது 58.

கொல்கத்தா பிரசின்டென்சி கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தவர், அங்கு 1981ம் ஆண்டு பிஎஸ் பட்டம் பெற்றார். தொடர்ந்து  டில்லி ஜவஹர்லால்  நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.  பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் “தகவல் பொருளாதாரத்தில் கட்டுரைகள்” குறித்து ஆய்வு செய்து பிஎச்.டி  படித்தவர்.

தற்போது, பழமையான மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஃபோர்டு அறக்கட்டளை சர்வதேச பொருளாதார பேராசிரியராக உள்ளார்.  ( Massachusetts Institute of Technology)

அபிஜித் பானர்ஜி பொருளாதார வல்லுனர்களான எஸ்தர் டஃப்லோ (தற்போதைய மனைவி), மைக்கேல் கிரெமர், ஜான் ஏ. லிஸ்ட்  மற்றும் செந்தில் முல்லைநாதனுடன்  இணைந்து வறுமை நடவடிக்கை  தொடர்பாக அப்துல் லத்தீப் ஜமீல் (J-PAL) என்ற ஆய்வு நிறுவனத்தை நிறுவினார். இதன்மூலம்  பொருளாதாரத்தின்  காரண உறவுகளைக் கண்டறிய ஒரு முக்கியமான வழிமுறையாக கள சோதனைகளை அவர் முன்மொழிந்தார். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேருக்குத்தான் இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அபிஜித் பானர்ஜி பொருளாதார நிதி அமைப்புகள் மற்றும் வறுமை பற்றிய கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கான ஆராய்ச்சி பணியகத்தின் தலைவராககவும் உள்ளார்.

அதுபோல, தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் ஆராய்ச்சி கூட்டாளர், பொருளாதார கொள்கை ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர், அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமி, மற்றும் எக்கோனோமெட்ரிக் சொசைட்டியிலும் உறுப்பினராக உள்ளார். ஏழை பொருளாதாரத்தின் இணை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

உலகளாவிய வறுமையை ஒழிப்பதில் குறிப்பாக முக்கியத்துவம் அளித்து, வளர்ச்சி பொருளாதாரத் துறையில் பணி யாற்றியதற்காக பானர்ஜிக்கு 2019 ஆம் ஆண்டில் பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசு வழங்கப் பட்டது.

அபிஜித் பானர்ஜியின் முதல் மனைவி பெயர் அருந்ததி துலி பானர்ஜி. இவர் கொல்கத்தா எம்ஐடியில் இலக்கிய விரிவுரை யாளளராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டு மணமுறிவு ஏற்பட்டது. இந்த தம்பதிக்கு முதன்முதலாக 1991ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் கபிர் பானர்ஜி.

இதற்கிடையில் அபிஜித்பானர்ஜிக்கும் கொல்கத்தா எம்ஐடியில் பொருளாதார ஆய்வு படிப்பு படித்துவந்த எஸ்தர் டஃப்லோ என்பவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  எஸ்தர், வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாட்டு பொருளாதாரம் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 

அபிஜித் பெற்ற விருதுகள்:

கடந்த  2004 இல் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஜித்துக்கு, பொருளாதாரத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக, பொருளாதாரத்தின் சமூக அறிவியல் பிரிவில் இன்போசிஸ் பரிசு கடநத் 2009ம் ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டார். சமூக அறிவியல் (பொருளாதாரம்) பிரிவில் முதன்முதலாக  இன்போசிஸ் பரிசைப் பெற்றவர் அபிஜித்.

கடந்த 2012 ஆம் ஆண்டில், ஜெரால்ட் லோப் ( Gerald Loeb Award ) விருதுக்கான தனது மனைவியான எஸ்தர் டுஃப்லோவுடன் இணைந்து பெற்றார். ஏழை பொருளாதாரம் புத்தகத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், 2015 க்குப் பிறகு மில்லினியம் மேம்பாட்டு இலக்குகளை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட நிபுணர்களின் குழுவுக்கு அபிஜித் பெயரிட்டு கவுரவிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டில், உலக பொருளாதாரத்திற்கான கீல் நிறுவனத்திடமிருந்து பெர்ன்ஹார்ட்-ஹார்ம்ஸ்-பரிசைப் ( Bernhard-Harms-Prize) பெற்றார்.

2019 ஆம் ஆண்டில், ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் இந்தியாவின் 34 வது தொடக்க நாளன்று,  சமூகக் கொள்கையை மறுவடிவமைப்பு செய்வது குறித்து சொற்பொழிவாற்றினார்.

தற்போது,  உலகளாவிய வறுமையை ஒழிக்கும் பணிக்காக இந்த ஆண்டுக்கான (2019)  நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி அவருடன் இணைந்து பணியாற்றிய  எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

2வது மனைவி எஸ்தர் உடன் அபிஜித்

எஸ்தர் டஃப்லோ  பாரிஸில் உள்ள எக்கோல் நார்மல் சூப்பரியூர் கல்லூரியில் வரலாறு, பொருளாதாரம் தொடர்பான பட்டங்களை பெற்றார்.

மேலும் ஏராளமான பரிசுகளையும் எஸ்தர் பெற்றுள்ளார்.

1972ம் ஆண்ட பிறந்த எஸ்தர், 1999ம் ஆண்டு கொல்கத்தா எம்ஐடியில் பொருளாதா ஆய்வுக்கான பிஎச்டி பட்டம் பெற்றார். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை மக்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

கடந்த 2010ம் ஆண்டு கிளார்க் பதக்கம், 2011ம் ஆண்டு “ஜீனியஸ் கிராண்ட்” பெல்லோஷிப் விருது,  2011ம் ஆண்டு டேவிட் என் கெர்ஷா விருது, கடந்த 2014ம் ஆண்டு இன்போசிஸ் பரிசு,  கடந்த 2015ம் ஆண்டு,  சமூக அறிவியலுக்கான இளவரசி அஸ்டூரியாஸ் விருது மற்றும் ஏ.எஸ்.கே சமூக அறிவியல் விருது உள்பட ஏராளமான விருதுகள்  பெற்றுள்ளார்.

தனது கணவர் அபிஜித்பானர்ஜியுடன் சேர்ந்து எழுதிய ‘ஏழை பொருளாதாரம்’ ( Poor Economics’) என்ற புத்தகத்துக்கான விருதும் பெற்றுள்ளார். இந்த புத்தகம் உலகம் முழுவதும் 17மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமாகி உள்ளது. உலக பொருளாதார மேதைகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், அமெரிக்க பொருளாதார மதிப்பாய்வின் ஆசிரியர் ஆகவும் உள்ளார். தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினராகவும், பிரிட்டிஷ் அகாடமியின் ஒரு தொடர்புடைய உறுப்பினராகவும் உள்ளார்.