டில்லி

ந்தியப் பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐஐடிக்களை உலகத் தரத்தில்  உயர்த்த புராஜக்ட் விஸ்வஜீத் என்னும் திட்டத்தை மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது.

இந்தியப் பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐஐடி மிகவும் பிரபலமானவை ஆகும்.  இவற்றில் சேர மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.   இந்த கல்வி நிறுவனங்களை உலகத் தரத்தில் உயர்த்த மத்திய மனித வளத் துறை அமைச்சகம் கடந்த 2016 ஆம் வருடத்தில் இருந்து முயன்று வருகிறது.    இதன் மூலம் பல உலக நாடுகளில் இந்த கல்வி நிலையங்களின் பெருமை  பரவி வெளிநாட்டு மாணவர்கள் பெருமளவில் சேரவும் வகை செய்யும் எனக் கூறப்படுகிறது.

இதையொட்டி ஒரு புதிய திட்டம் ஒன்றை மத்திய மனித வளத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  இந்த திட்டத்துக்கு புராஜக்ட் விஸ்வஜீத் (விஸ்வஜீத் திட்டம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.  விஸ்வஜீத் என்றால் உலகை வெற்றி கொள்வது எனப்  பொருளாகும்.   ஐஐடிக்கள் மூலம் உலகை வெற்றி கொள்ளும் தனது விருப்பத்தை ஒட்டி அமைச்சகம் இந்த பெயரைத் தேர்வு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஏழு ஐஐடிக்கள் கொண்டு வரப்பட உள்ளன.  அவை மும்பை, டில்லி, சென்னை, காரக்பூர், கவுகாத்தி, ரூர்கி மற்றும் கான்பூர் ஆகும்.   இந்த திட்டத்தில் ஆய்வு உதவிகள் வழங்கப்பட உள்ளன.  அத்துடன் இதில் வெளிநாட்டு ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், சர்வதேச மாணவர்கள் ஆகியோர் இணைக்கப்பட உள்ளனர்.    இந்த திட்டத்துக்கு ரூ.1500 கோடி தேவைப்படும் நிலையில் அமைச்சகம் ரூ.500 கோடி வழங்க உள்ளது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஐஐடி களுக்கான நிதி 12.2% அதிகரிக்கப்பட்டு ரூ.6409.95 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் புதிய ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புக்களுக்காக வரும் 2020 ஆம் ஆண்டு ரூ.608.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.    எனவே மீதமுள்ள நிதியை நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் இருந்து பெற ஐஐடிக்கள் முடிவு செய்துள்ளன.