டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்பைடக்கு ஆள்சேர்க்கும் வகையில் இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ராணுவத்தில் 4ஆண்டுகள் ஒப்பந்த முறையில் சேவையாற்றும் வகையில் ‘அக்னிபாத்’ என்னும் புதிய திட்டத்தை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  டெல்லி, பீகார்,உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலுங்கானா, அரியானா போன்ற மாநிலங்கள் இளைஞர்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளதுடன், பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து,  அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விரும்பும் வீரர்களின் வயது உச்ச வரம்பு 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவோருக்கு அசாம் ரைஃபில் படை பிரிவில் சேர 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, ராணுவத்தில் விரைவில் ஆள்சேர்ப்பு பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,  அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பாணையை விமானப்படையும் வெளியிட்டுள்ளது.

ஜூன் 24 முதல் ஜூலை 5ம் தேதி வரை இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான பதிவு நடைபெறும். ஜூலை 24ம் தேதி முதற்கட்ட ஆன்லைன் தேர்வு நடைபெறும்  என இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.