கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 40 லட்சம் என்று உலக சுகாதார அமைப்பு மதப்பீடு செய்துள்ளது.

கோவிட் 19 மரணம் குறித்த மதிப்பீடுகளை வெளியிட ஜனவரி மாதம் முதல் WHO முயற்சி மேற்கொண்ட போதும் “இந்தியாவின் ஆட்சேபனை காரணமாக பல மாதங்களாக தாமதமானது” என்று சனிக்கிழமை அன்று வெளியான நியூயார்க் டைம்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“5,21,000 பேர் மட்டுமே மரணமடைந்ததாக இந்தியா கூறிவரும் நிலையில் உலக சுகாதார அமைப்பின் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால், கொரோனா மரணம் குறித்த மதிப்பீடு செய்ய உலக சுகாதார அமைப்பு கடைபிடித்த வழிமுறைகள் குறித்து ஆட்சேபம் தெரிவித்து இந்தியா ஆறு கடிதங்களை WHO-வுக்கு அனுப்பியுள்ளது.

அது தவிர, 2021 நவம்பர் மாதம் முதல் ஐந்து முறை இணையவழி சந்திப்புகள் மூலம் ஆட்சேபம் தெரிவித்திருந்தது” என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

WHO மேற்கொண்ட ஆய்வு முறை குறித்து கேள்வியெழுப்பியுள்ள சுகாதார அமைச்சகம், அதன் அறிக்கை “குறைபாடு”, “ஊகங்கள்”, “தவறானவை” மற்றும் நிரூபிக்கப்படாத அனுமானங்களின் அடிப்படையில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால், 2021 ஜூலை முதல் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கோவிட்-19 காரணமாக இறந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இந்த ஆய்வு அறிக்கைகள் WHO மதிப்பிட்டுள்ள 40 லட்சம் மரணத்துடன் ஒத்துப்போவதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

“சிறிய நாடுகள் மற்றும் மக்கள் தொகையில் பெரிய நாடான இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியான ஆய்வு அணுகுமுறையை கடைபிடிப்பது தவறான மதிப்பீட்டையே தரும். துனிசியா போன்ற சிறிய நாடுகளுக்கு உரிய ஆய்வு அணுகுமுறை இந்தியாவுக்கு பொருந்தாது” என்றும் “இந்த ஒற்றை ஆய்வு அணுகுமுறை ஒன்றுக்கும் உதவாது” என்றும் தரவு மற்றும் புள்ளிவிவரங்களில் கில்லியாக செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.