இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த அமைச்சரவை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று நியமித்தார்.

புதிய அமைச்சரவையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

ராஜபக்சே சகோதரர்களுள் ஒருவரான சமல் ராஜபக்சே, மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே மற்றும் அவர்களது உறவினர் சஷீந்திரா ஆகியோருக்கு இந்த அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.

கூட்டணி அமைச்சரவை அமைக்க எதிர்கட்சியினருக்கு ராஜபக்சே அழைப்பு விடுத்த நிலையில் அதனை அவர்கள் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருவதுடன் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது.

மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் மின் தடை உள்ளிட்ட காரணங்களால் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட முடியாத நிலையில் மக்கள் தொடர்ந்து வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்க இருக்கும் அமைச்சரவையால் எந்த வித மாற்றமும் ஏற்பட போவதில்லை என்றும் ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது மக்களை திசை திருப்பும் முயற்சி என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.