ஒரு பெரும் புரட்சிக்கு, அதிரடி தாக்குதலுக்கு வித்திடுபவன் செயல்பாடுகளே தனி ரகமாக இருக்கும்..
முதலில் தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் சிலரை தேர்ந்தெடுப்பான். பின்னர் அவர்களிடம் சில காரியங்களை தனித்தனியாக ஒப்படைப்பான்.
ஒருவருக்கொருவர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பார்த்துக்கொள்வான். அப்படியே காரியம் பற்றி வெளியே லேசாக வெளிப்பட்டாலும் எதற்காக நடைபெறுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் குழப்பமே மேலோங்கும் வகையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வான்.
அனைத்து மட்டத்திலும் எல்லாம் முடிந்தாகி விட்டது என்று உறுதி செய்துகொண்ட பிறகுதான் தான் நினைத்த விதத்தில் களம் இறங்குவான்.
நியூயார்க் இரட்டை கோபுரத்தாக்குதல் அன்று 4 விமானங்கள் கடத்தப்பட்டன. அதனை கடத்திய ஒவ்வொருவனுக்கும், தாம் மட்டும் ஒரேயொரு விமானத்தை கடத்துகிறோம் என்ற அளவிற்கு மட்டுமே தெரியும். திட்டத்தை செயல்படுத்தியவனுக்குத்தான் ஒரே நாளில் 4 விமானங்கள் என தெரியும் என்று பார்த்திருக்கிறோம்..
ராணுவம், வருமான வரித்துறை, காவல் என பல துறைகளிலும் இப்படித்தான்  சகல முஸ்தீபுகளுடன் உள் நீச்சலிலேயே ரகசியமாக பயணித்து திடீரென வெளிப்பட்டு அதிரடியை காண்பிப்பார்கள்..
balck-money1
150 பக்கம் தயாராகிற ஒரு புத்தகத்திற்கு பலரும் வேலை செய்வார்கள்..ஆனால் தாங்கள் எடுக்கிற செய்தி, வடிவமைக்கிற பக்கம், வருமா, வராதா.அப்படியா வந்தாலும் எந்த பக்கத்தில் வரும் என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியவே தெரியாது.
பத்திரிகையின் ஆசிரியர்தான், வரவேண்டிய விஷயங்கள், அதுவும்எங்கெங்கே வரவேண்டும் என்று கடைசியில் தீர்மானிப்பார். அதன்படி அச்சிட உத்தரவு பிறப்பிப்பார்..இதுமாதிரி சொல்லிக்கொண்டே போகலாம்…
மீண்டும் மீண்டும் உறுத்திக்கொண்டே இருப்பது, மோடி எதைப்பற்றியும் ஆலோசிக்காமல் தன்னிச்சயாக அறிவித்துவிட்டு அதன்பிறகு தவிக்கிறாரோ என்கிற விஷயம்தான்.
பீதியை தெளியவைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி உட்பட யாரும் தெளிவாக பேசமாட்டேன் என்கிறார்கள்..புது 500 ரூபா எப்போது வரும் என்று நீதிமன்றம் கேட்டால் எங்களுக்கு தெரியாது என ரிசர்வ் வங்கியே சொல்லும் மோசமான நிலைமை.
மாறிமாறி வரும் அறிவிப்புகள், திருமணத்திற்கு சலுகை,,அப்புறம் அதனை நிறுத்திவைப்பு என பல குளறுபடிகள் அடிவயிற்றில் புளியை கரைக்கின்றன
ஏடிஎம்மில் வெறும் 2000, வங்கிக்கணக்கிலிருந்து வாரத்திற்கு அதிகபட்சம் 24,000..இதனை கொடுப்பதற்கே 13 நாட்களாகியும் முடியவில்லை. இதற்கே கரன்சி தட்டுப்பாடு என நாக்கு தள்ளுகிறது என்றால்.. கோடிக்கணக்கானோரின் மாச சம்பள தேதி வரப்போகிறதே..
 – ஏழுமலை வெங்கடேசன்