டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,015 பேருக்கு கொரோனா பாதிப்பும், 36,977  பேர் தொற்றில் இருந்து குணமடைந்தும் உள்ளனர். அதே வேளையில் 3,998 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும் உள்ளனர்.

நேற்றைய கொரோனா பாதிப்பு  30,093 ஆக இருந்த நிலையில், இன்று 42,015 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 11,922 பேர் பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் இந்தியா உள்பட உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது. தற்போது பரவியுள்ள கொரோனா 2வது அலையின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. அதற்குள் கொரோனா 3வது அலை தாக்குதல் தொடங்குவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 42 ஆயிரத்து 015 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 337 ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 36,977 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 03 லட்சத்து 90 ஆயிரத்து 687 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.36 சதவீதமாக உள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி  3,998 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,18,480 ஆக உயர்ந்துள்ளது.  இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் தற்போதைய நிலையில் 4,07,170 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை  41,54,72,455 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.