டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்டு உள்ளதுடன், 295 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதே வேளையில், 43,938 பேர் குணமடைந்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும் அவ்வப்போது ஏறி இறங்கி காணப்படுகிறது. இதற்கிடை யில் மத்திய மாநில அரசுகள் வழங்கிய தளர்வுகள் காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,  நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,478,419 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில், தொற்று பாதிப்பு காரணமாக 295 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,45,133 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 43,938 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,27,15,105 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,18,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 80,85,68,144 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,78,296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்தியஅரசில் இருந்து இதுவரை 79.58 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள்  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, மேலும் 15 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் வழங்கப்பட உள்ளது.