சென்னை: தமிழ்நாட்டில் 222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை தமிழ்நாடு அரசு சமாளிக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார் .

மெகா தடுப்பூசி முகாம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில் தடுப்பூசி முகாமை ஆய்வுசெய்த மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மாநிலத்தில் மொத்தமாக 4.2 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 3.20 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசிகளும், 94 லட்சம் பேர் 2ஆவது தவணை தடுப்பூசிகளும் செலுத்தி உள்ளனர். முதல் தவணை தடுப்பூசியை பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 75 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 73 சதவீதமும், திருப்பூரில் 67 சதவீதமும், சென்னையில் 65 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளன.

2ஆவது தவணை தடுப்பூசி சென்னையில் 32 சதவீதமும், நீலகிரியில் 29 சதவீதமும், கோவையில் 25 சதவீதமும், பூந்தமல்லியில் 23 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி, கடலூர், நெல்லை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசியை 40 சதவீதம் பேர் மட்டுமே போட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சை, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அடுத்த 6 வாரம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் நோயை முழுமையாகத் தடுக்க முடியும். அக்டோபர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 3ஆவது அலை வரக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ணமும், ஒரே வேளை வந்தாலும் தமிழக அரசு சமாளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். 3ஆவது அலை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் 222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 172 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் நிறுவும் பணி முடிவடைந்துள்ளது. 17 ஆயிரத்து 940 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயார்நிலையில் உள்ளன.

டெங்குவை பொறுத்தவரை, கொசுக்களைஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அழிப்பதற்கு கம்பூசியா போன்ற மீன்களை பயன்படுத்துவது, வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கோவை மாவட்டத்தில் 13 எல்லையோர கிராமங்கள் இருக்கின்றன. கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொசு மருந்து அடிப்பது, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பது, தேவையற்ற தண்ணீர் தேக்கங்களை அகற்றுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பரவும் ஜிகாவாக இருந்தாலும், இப்போது பரவத் தொடங்கியுள்ள நிபாவாக இருந்தாலும், தமிழகத்துக்கு பாதிப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.