சென்னை: தமிழ்நாடு வருகை தந்துள்ள  துணைத் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்  ஐ.ஐ.டி வளாகத்தில் சென்டர் ஃபார் இன்னோவேஷன் (சிஎஃப்ஐ) மையத்தை வைத்தார். நிகழ்ச்சியில் பேசியவர்,  இந்தியா ஸ்டார்ட்அப் வளர்ச்சியில் 3-வது இடத்தில் உள்ளதாக கூறினார்.  முன்னதாக அவரை சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வரவேற்றனர்.

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் ஃபார் இன்னோவேஷன் (சிஎஃப்ஐ) கண்டுபிடிப்புகள் வசதி மையத்தை துணைத் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தார். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த அவரை ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர்.

மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு (I&E) செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. மையத்தை திறந்து வைத்து ஜக்தீப் தன்கர் பேசுகையில், “கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அந்நிறுவனத்தின் பலம். மாணவர்கள் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வர். ஐஐடி-மெட்ராஸ் புதுமைகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. மாணவர்கள் இப்போது எல்லாம் வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாறிவிட்டனர்.

தற்போது நாட்டில் 80,000 ஸ்டார்ட்அப்கள் உள்ளன. உலகளவில் இந்தியா ஸ்டார்ட்அப் வளர்ச்சியில் 3-வது இடத்தில் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறிவிட்டது. இப்போது இந்தியா பேசும்போது உலகம் கேட்கும்” என்று கூறினார்.