புதுடெல்லி: கிர் வகை காளைகளின் 1 லட்சம் டோஸ் அளவுள்ள விந்தைப் பெறுவதற்கு, பிரேசில் நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது இந்திய அரசு.

தற்போது நாடெங்கிலும் பிரபலமாக உள்ள ஜெர்ஸி வகை பசுக்களுக்கு மாற்றாக, இந்திய பசு வகையை இனப்பெருக்கம் செய்விக்க வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் கடந்த காலங்களில் ஆர்வம் காட்டப்பட்டது. அதன் விளைவாகத்தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பிரேசில் நாட்டிலிருந்து வரவழைக்கப்படும் பதனம் செய்யப்பட்ட விந்தின் மூலம் செயற்கை கருவூட்டல் மேற்கொள்ளப்படும்.

அடுத்த 1.5 மாதத்திற்குள், நமது பாரம்பரிய கிர் காளைகளின் பதனம் செய்யப்பட்ட விந்து டோஸ்கள் உள்நாட்டிலேயே கிடைக்கும் என்று மத்திய கால்நடைத்துறை இணையமைசசர் சஞ்சீவ் பல்யாண் தெரிவித்தார்.

“இது நாடெங்கிலும் விநியோகம் செய்யப்பட்டு, உள்நாட்டிலேயே பாரம்பரிய பசுக்களை இனப்பெருக்கம் செய்விக்கும் செயல்பாட்டை துவங்க முடியும்” என்றார் அவர்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கிர் இனவகை மாடுகள், கடந்த 18ம் நூற்றாண்டில், பாவ்நகர் அரசரால் பிரேசில் நாட்டிற்கு காணிக்கையாக அளிக்கப்பட்டதாம்.