புதுடெல்லி:

அமெரிக்க பொருளாதார தடைகளை தவிர்க்கும் வகையில், ரஷ்யாவுடன் புதிய முறையிலான பரிவர்த்தனையை செய்து கொள்ள இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


அமெரிக்க பொருளாதார தடைகளை தவிர்க்கும் வகையில் ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கும் சீனா போன்ற நாடுகள் நேரிடையாக பணத்தை செலுத்துவதில்லை.

தங்கள் நாட்டிலிருந்து ரஷ்யாவுக்கு தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்து, அந்த தொகையை ஈடு செய்து கொள்கின்றன.

ஆனால், இந்தியா இதுபோன்ற ஏற்றுமதி மூலம் நடக்கும் பண பரிமாற்றத்தை செய்வதில்லை.
இது தொடர்பாக விவாதிக்க இந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்சய் மித்ரா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர்,கடந்த வாரம் ரஷ்யாவுக்கு சென்றனர்.

போர் விமானங்கள் மற்றும் ஆயுதத் தளவாடங்கள் வாங்கும்போது பணத்தை எந்த வகையில் திருப்பிச் செலுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் ஏவுகணை, அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றை வாங்க தோராயமாக 7 பில்லியன் டாலரை ரஷ்யாவுக்கு இந்தியா கொடுக்க வேண்டியிருக்கும். நீர்மூழ்கிக் கப்பல் மட்டும் இந்திய மதிப்புக்கு ரூ.40 ஆயிரம் கோடியாகும்.

3 லட்சம் கி.மீ தொலைவுக்கு அப்பால் வரும் ஆபத்தை கண்டறியும் விண் பாதுகாப்பு முறை இந்திய விமானப் படைக்கு பெரும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதை தடுக்கும் வகையில், 2017-ம் ஆண்டு ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசு  விதித்தது.

மொத்த தொகையையும் ஏற்றுமதி மூலம் ஈடுகட்டும் நிலையில் இந்தியா இல்லை. ஏனெனில், இந்தியாவுக்கு தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலை இல்லை.

எனவே வேறு வழிகளில் தொகையை திருப்பிச் செலுத்துவது குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

எந்த முறையில் ரஷ்யாவுக்கு பணம் வழங்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை.