கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ஆடுவதால், டி-20 ஸ்பெஷலிஸ்டுகள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்திய பேட்ஸ்மென்கள், இன்றையப் போட்டியில் அடுத்தடுத்து எளிதாக சரிந்தனர்.

துவக்க வீரர் கேஎல் ராகுல் மட்டுமே 40 பந்துகளில் 51 ரன்களை அடித்து அரைசதம் கடந்தார். ஆனால், தவான், கோலி, மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் மற்றும் பாண்ட்யா என அனைவருமே சொற்ப ரன்களில் காலி.

இறுதியாக ஆல்ரவுண்டர் ஜடேஜா மட்டுமே, சற்று மானத்தைக் காப்பாற்றும் வகையில் நிலைத்து நின்று ஆடி, 23 பந்துகளில் 44 ரன்களை அடித்து, கடைசிவரை அவுட்டாகாமல் நின்றார். ஜடேஜாவின் கடைசிநேர ஆட்டத்தால், 140 ரன்களாவது எட்டுமா? என்ற நிலையிலிருந்த இந்திய அணி, 160 ரன்களைக் கடந்தது.

ஆஸ்திரேலியா தரப்பில், ஹென்ரிக்யூஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் 4 ஓவர்களுக்கு 22 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஹேசில்வுட் 4 ஓவர்களுக்கு, விக்கெட் இன்றி 39 ரன்களை வழங்கினார். சீன் அபோட் 2 ஓவர்களுக்கு 23 ரன்களை விக்கெட் இன்றி வழங்கினார். மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.