டில்லி:

ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இந்தியா வந்துள்ளார். ஐதராபாத் இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். டில்லி சென்ற அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஈரான் அதிபரை சந்தித்து பேசினார்.

இதை தொடர்ந்து டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், ரவுகானி சந்தித்து பேசினர். பிராந்திய விவகாரங்கள், அரசியல் சூழ்நிலைகள் குறித்து இருவரும் பேசினர். பின்னர் வர்த்தகம், பாதுகாப்பு உட்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இது குறித்து மோடி கூறுகையில், ‘‘நாட்டின் ஒற்றுமை உட்பட முக்கிய அம்சங்களின் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து இருவரும் பரிமாறிக் கொண்டோம். பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல் போன்ற சவால்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது’’ என்றார்.

ஈரான் அதிபர் கூறுகையில்,‘‘ பயங்கரவாதத்தை எதிர்க்க தீர்மானம் மேற்கொண்டுள்ளோம். பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இருவரும் பொதுவான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம்” என்றார். இரு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, இணைப்பு, ஆற்றல், பிராந்திய பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை பயனுள்ள உள்ள வகையில் இருந்தது என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்துள்ளார்.