டில்லி

நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கொரோனா காலத்தில் இந்திய அரசு நடந்துக் கொண்டது பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த அமரித்தியா சென் 1933 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார்.   இவர் ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பணி புரிந்துள்ளார்.  இவர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மற்றும் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் ஆவார்.  இவர் சமீபத்தில் ஒரு செய்தி ஊடகத்துக்குப்  பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் அமர்த்தியா சென், “சென்ற ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவிய போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது மத்திய அரசு காண்பித்த முரண்பாடு இந்தியாவுக்கு இன்னும் அதிகமான ஜனநாயகம் தேவை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துவிட்டது. ஜனநாயகத்தின் வலிமை, அந்த நாட்டின் ஏழைகளை நடத்தும் விதத்தில் பிரதிபலிக்கும். ஆனால் தொற்றுநோய் காலகட்டத்தில் இந்தியாவில் அந்த ஜனநாயகம் காணப்படவில்லை.

தனது முதல் லாக்டவுனின்போது மத்திய அரசு ஏழைகளின் நலன்களில் சிறப்புக் கவனம் செலுத்தாமலிருந்து அவர்களின் நலன்களைப் புறக்கணித்தது. அந்தநேரத்தில் ஏழைகளால் வேலை தேடக் கூட முடியவில்லை. நாட்டில் முதல் லாக்டவுன் அறிவித்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட பின்னர், தங்கள் வீட்டை விடுத்து வெகு தொலைவில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர். இவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நிர்வாக பணிகள், தடுப்பூசி பணிகள் ஆகியவை தெற்காசியாவின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையில் காணப்படும் அணுகுமுறையில் பெரும் வேறுபாட்டைக் காட்டியது. கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது நடத்தப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில், அந்தத் தேர்தல் அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் மோதிக்கொள்ளும் விதமாக அமைந்தது.

இதுவரை மேற்கு வங்கத்தில் ஒருபோதும் ஆட்சியமைக்காத பாஜக, இந்த முறை வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தல்கள் நடப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தன. ஆகவே அந்த நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று அவர்கள் சொல்ல முடியாத நிலையிலிருந்தது.  மேலும். அப்படிச் சொன்னால் அது திடீரென தன்னம்பிக்கை இல்லாதது போல் அமைந்துவிடும். மதச்சார்பற்ற கட்சிகளுக்கு, குறிப்பாக திரிணாமூல் காங்கிரஸ் தேர்தலை நிறுத்த முயற்சிப்பது பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்காதது போல் இருந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.