டெல்லி: எதிர்க்கட்சிகளைக் கொண்ட  “‘ஐஎன்டிஐஏ  எனப்படும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில், டிசம்பர் 19ம் தேதி, பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மத்திய பாஜக அரசை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளன.  இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட 29 கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன.   இந்த கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்துள்ளன.

இந்த எதிர்க்கட்சி கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும் மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. 4வது கூட்டம் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 6ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உள்பட பல மாநில கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் தங்களது கவனத்தை செலுத்தின. இதற்கிடையில்,  கூட்டணிக்குள் சில சலசலப்புகள் எழுந்தன. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையில்,  ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலும் முடிந்து, 3 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இது  காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம்  வரும் 19ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் டிசம்பர் 19ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இக்கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் டெல்லி வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் வேட்பாளர்,  தொகுதி பங்கீடு, ஒன்றாக தேர்தல் பொதுக்கூட்டங்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.