டெல்லி: இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான வர்த்த ஒப்பந்தத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்  என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்  இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் காணொலி வாயிலாக நடைபெற்ற  நிகழ்ச்சியில் டெல்லியில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில்,  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலியா வர்த்தகத்துறை மந்திரி டான் டெஹான் ஆகியோர்  கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  ,  “இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பரஸ்பர நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதைக் காட்டும் இந்த ஒப்பந்தம், இது, இருநாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை வெளிக்காட்டியிருக்கிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான  வர்த்தகம் அதிகரிப்பது மட்டுமின்றி,  இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் விநியோகச் சங்கிலி பின்னடைவை வலுப்படுத்தும் என்றார். மேலும், இந்த ஒப்பந்தத்தால்,  இரு நாடுகளுக்கும் இடையே மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்கும்” என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்த ஒப்பந்தமானது இருநாடுகளுக்கிடையேயான உறவில்மேலும் ஒரு மைல்கல் என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல்,  இது  இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், அடுத்த ஐந்தாண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை, தற்போதுள்ள 2700 கோடி அமெரிக்க டாலரில் இருந்து கிட்டத்தட்ட 45-50 கோடி அமெரிக்க டாலராக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம், எதிர்காலத்தில் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க வழிவகுக்கும் என்று நம்புவதாக கூறியவர்,  அடுத்த நான்கைந்து ஆண்டுகளில், இந்தியாவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.

இந்த ஒப்பந்தப்படி,  இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பு,  சுற்றுலாவை மேம்படுத்து வதற்கான, பணி விசா மற்றும் விடுமுறை விசா ஏற்பாடு, 2-4 ஆண்டுகள் வரையிலான படிப்புகளுக்குப் பிந்தைய பணி விசா, இந்திய மாணவர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.