சென்னை: நாட்டின் 74வது சுந்திரத்தின விழா வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை யில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி மெரினா கடற்கரை சாலையில் வழக்கமாக நடைபெறும்.

இந்த நிலையில்,  சுதந்திர தின விழா ஒத்திகை காரணமாக, மெரினா கடற்கரை காமராஜர் சாலை யில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவில் சுதந்திர தின விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  ஆகஸ்ட் 15 ஆம் தேதி 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளி, முகக கவசம் அணிதல் உள்ளிட்டவை அவசியம் பின்பற்ற வேண்டும் என கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை வழிக்காட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்திலும் சுதந்திர தினவிழா பாதுகாப்புடன் கொண்டாடப்படவுள்ளது.

இதையடுத்து,  சுதந்திர தின விழா ஒத்திகை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 8, 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் உழைப்பாளா் சிலையில் இருந்து போா் நினைவுச்சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச்சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்படும்.

காமராஜா் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்,

அதேபோல் பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை வந்தடையலாம்,

அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜா் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை சென்றடையலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.