சென்னை,

ரும் மார்ச் 1ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களே அதிக லாபம் சம்பாதிப்பதாக கூறி போராட்டம் நடத்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீப காலமாக திருட்டு வீசிடி, ஆன்லைனில் புதிய படம் தரவிறக்கம்,  ஜிஎஸ்டி வரி, உள்ளூர் கேளிக்கை வரி போன்ற காரணங்களால் சினிமா தயாரிப்பாளர்களும், திரையரங்குகளும் கடும் நெருக்கடிகளை சமாளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கியூப், யுஎப்ஓ கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட தென்னிந்திய சினிமா துறையினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், மினிமம் கியாரண்டி ரிலீஸ் குறித்தும்,  ஜிஸ்டி வரி, கியூப் கட்டணம் இவற்றோடு தியேட்டர் பார்க்கிங் கட்டணம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  வருகிற மார்ச் முதல் தேதியிலிருந்து ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலக அமைப்புகளும் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகலாம் என கோலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இந்த போராட்டத்தில் திரையுலகை சேர்ந்த அனைத்து சங்கத்தினரும் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகவும், ஒட்டு மொத்த சினிமா உலகமே வேலைநிறுத்ததில் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.