நாகர்கோவில்:

மிழகத்தில் கொரோனோ வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தாக்கத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா தனிவார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த ராஜாக்கமங்கலம் துறை  பகுதியைச் சேர்ந்த 66 வயது முதியவர் கொரோனா தாக்கம் காரணமாக நாகர்கோவிலில் உள்ள ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், அங்கு சிகிச்சை பெற்று வந்த, திருவட்டாறை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கும், முட்டம் பகுதியை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தையும் மரணம் அடைந்துள்ளது.

இவர்களின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்காத நிலையில், அவர்களின் மரணம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் கொரோனா தாக்கத்தால் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

குமரி மாவட்டத்தில்  2 பேர் பலியான நிலையில், தற்போது 3 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், இந்த உயிரிழப்பை தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் மறுத்து உள்ளார். இன்று பலியான 3 பேரில் ஒருவர் நிமோனியாவாலும், இன்னொருவர் சிறுநீரக நோயாலும்,  குழந்தை ஹாக்கியோ பெட்ரோ சிஸ் எனும் நோயால்  உயிரிழந்து இருப்பதாக தெரிவித்து உள்ளார்.