அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் போலந்து எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேற விரும்பும் மாணவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க பிப். 15ம் தேதி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது.

பிப். 20, 22, 24 ஆகிய தேதிகளில் மூன்று சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிப். 18 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் இன்று வரை உக்ரைன் நாட்டின் எந்தெந்த நகரங்களில் எத்தனை மாணவர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்ற தரவு இல்லாமல் மாணவர்களை மீட்க திணறி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக புதிதாக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மீண்டும் தரவு சேகரிக்கும் பணியையும் துவங்கியுள்ளது.

உக்ரைனில் நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்கள் எப்படியாவது வெளியேறி உக்ரைன் எல்லையில் உள்ள நாடுகள் வழியாக வெளியேற இந்திய தூதரகம் இன்று அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு எந்த ஒரு திட்டமும் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் எந்தெந்த இடத்தில் எவ்வளவு மாணவர்கள் இருக்கிறார்கள் என்ற முறையான விவரங்களை வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், போலந்துக்குள் செல்ல முடியாமல் உக்ரைன் – போலந்து எல்லையில் பல சவால்களை சந்தித்து வந்த இந்திய மாணவர்களை கேரள காங்கிரஸ் பிரிவுடன் இனைந்து காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய நாடுகள் பிரிவு மீட்டு போலந்தில் அவர்களுக்கு தங்குவதற்கு இடமும் உணவும் அளித்து ஆதரவளித்து வருகிறது.

தங்களை தொடர்பு கொண்ட கடைசி குழுவையும் மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்திய விமானங்களுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.