சென்னை

நேற்று தமிழகத்தில் நடந்த இரண்டாம் கட்ட  மெகா தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நேற்று தமிழகத்தில் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.   நேற்று அரசிடம் 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே இருந்ததால் 16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.   ஆனால் முகாமுக்கு 16,43,879 பேர் வந்ததால் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.   இதன் மூலம் தமிழகம் இரண்டாம் முறையாக இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதில்  சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.  இந்த முகாம்களில் சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுதாங்கலில் உள்ள முகாம்களை நேற்று முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்களுடன் உரையாடி பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.   இதைப் போல் பல இடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார்.

நேற்று சென்னையில் அதிகபட்சமாக 2,01,805 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதில் முதல் டோஸ் 1,08,570 பேருக்கும் இரண்டாம் டோஸ் 93,235 பேருக்கும் போடப்பட்டுள்ளது. இரண்டாவதாகக் கரூரில் 1,00,036 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  இவர்களில் 81,575 பேர் முதல் டோசும், 18,461 பேர் இரண்டாம் டோஸும் போட்டுக் கொண்டுள்ளனர். மூன்றாவதாகக் கோவையில் 49,007 பேர் முதல் டோஸ், மற்றும் 45,716 பேர் இரண்டாம் டோஸ் என மொத்தம் 94,723 பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.,

நேற்றைய முகாமில் மிகவும் குறைந்த பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 4793 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  இவர்களில் 1279 பேர் முதல் டோஸ் மற்றும் 3514 பேர் இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர்.  அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் 9,496 பேர் அதாவது முதல் டோஸ் 4934 மற்றும் இரண்டாம் டோஸ் 3562 என போட்டுக் கொண்டுள்ளனர்.