மயிலாப்பூரில் நடைபெற்ற மாதர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம்

சென்னை:

பெண் பத்திரிகையாளர் குறித்து அநாகரிகமாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக, எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவரை கைது செய்யக்கோரி அனைந்தித்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை மைலாப்பூரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்கும்படி சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ராமதிலகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையிலும் அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்.

எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் கூறி வரும் நிலையில், அவர் மத்திய அமைச்சருடன் போலீசார் முன்னிலையிலேயே பொது நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார்.

இந்நிலையில், எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை மயிலாப்பூர், லஸ் கார்னரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாதர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமையில் ஏராளமான பெண்கள் இளைஞர்கள், வாலிபர்கள் பங்கேற்று இந்த போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தின்போது,  சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் எஸ்.வி.சேகரை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதன் காரணமாக லஸ் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.