போபால்:
போபாலின் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றிய பாஜக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பழங்குடியினரின் பெருமை தினமான இன்று போபாலின் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

போபாலைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த ரயில் நிலையம் நவாப் ஷாஜகான் பேகத்தின் பேரனான ஹபிபுல்லாவின் நினைவாக ஹபீப்கஞ்ச் என்று பெயரிடப்பட்டது. “அந்த நாட்களில், அரச குடும்பத்தாருக்கு ஒரு அளவு நிலம் அவர்களின் ‘டக் கார்ச்’ ஆக வழங்கப்பட்டது. ஹபிபுல்லாவுக்கு வழங்கப்பட்ட நிலமான ஷாபுராவில் ஒரு கிராமம் குடியேறியது. 1874-76ல் இப்பகுதி வழியாக ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, ஒரு சிறிய ரயில் நிலையம் வந்தது. 1969ல் ஹபிபுல்லாவின் குடும்பத்தினர் நிலமும், 15 லட்சம் ரூபாயும் ரயில் நிலையத்தை மேம்படுத்தக் கொடுத்தனர். எனவே, இது ஹபிபுல்லாவின் பெயரால் ஹபீப்கஞ்ச் என்று அறியப்பட்டது” என்று வரலாற்றாசிரியர் ரிஸ்வானுதீன் அன்சாரி கூறினார்.

440 கோடி ரூபாய் செலவில் பிபிபி மாதிரியில் உருவாக்கப்பட்ட நிலையத்தின் பெயர் மாற்ற முடிவு, 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதி வாக்காளர்கள் மத்தியில் இழந்த சில தளங்களை மீண்டும் பெற பாஜக மேற்கொண்ட முயற்சியைப் பிரதிபலிக்கிறது. கோண்டுகள் என்ற இனத்தைச் சேர்த்தவர்கள் 1.2 கோடிக்கும் அதிகமானோர் இந்தியாவின் மிகப் பெரிய பழங்குடியினர் குழுவாக உள்ளனர்.

செப்டம்பரில், மாநில அரசு சிந்த்வாராவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்குப் பழங்குடியினரின் சின்னங்களான ஷங்கர் ஷா மற்றும் ரகுநாத் ஷா ஆகியோரின் பெயரிட்டது, மேலும் அவர்களுக்கு ஒரு நினைவகத்தையும் கட்டடப்பட்டு வருகிறது.  காண்ட்வாவில் தந்தியா மாமாவின் நினைவிடமும், பர்வானி மாவட்டத்தில் பீமா நாயக்கின் நினைவிடமும் நிறுவப்பட்டுள்ளது.

பழங்குடியினரின் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் வழங்கப்படும் ராஜா சங்க்ராம் ஷாவின் ஆண்டு விருதான 5 லட்சம் ரூபாயை முதல்வர் சவுகான் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில்,  பாஜக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது.  மேலும் இந்த நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரை வைக்க வேண்டும் என்று சௌஹான் முன்பே வலியுறுத்தி இருந்தார் என்று காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சிக்கு நினைவூட்டியது.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் கமல்நாத்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோண்ட் ராணியின் நினைவாக ரயில் நிலையத்தின் பெயரை நீங்கள் மாற்றியிருந்தால் பரவாயில்லை, ஆனால் இடிந்து கிடக்கும் செஹூரில் உள்ள அவரது மஹாலின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.