மும்பை

மும்பை மின்சார ரயிலில் பயணம் செய்ய இன்று ஒரே நாளில் 17,759  சீசன் டிக்கட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

மும்பை நகரில் போக்குவரத்தில் மின்சார ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது.   கொரோனா பரவல் காரணமாகப் பொதுமக்களுக்கு மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.  இந்நிலையில் பயணிகளின் வேண்டுகோளுக்கிணங்க மகாராஷ்டிர அரசு 2 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதித்தது.

இன்று முதல் மகாராஷ்டிர அரசு அளித்த உத்தரவு அமலுக்கு வருவதால் ஏராளமான பயணிகள் தொடர்ந்து மின்சார ரயிலில் பயணம் செய்ய சீசன் டிக்கட்டுகளை வாங்க வந்தனர்.  மும்பை பெருமாநாகராட்சியினரின் உதவியுடன் அவர்கள் அடையாளம் மற்றும் தடுப்பூசி விவரங்கள் பரிசோதிக்கப்பட்டு சீசன் டிக்கட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

மும்பையில் உள்ள 53 ரயில் நிலையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 3 மணிவரை 18,324 பயணிகளின் அடையாளங்கள் மும்பை பெருமாநகராட்சியினரால் சோதிக்கப்பட்டன.  அதில் 17,759 பேருக்கு சீசன் டிக்கட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.  இதில் 12,772 டிக்கட்டுகள் மத்திய ரயில்வே மற்றும் 4987 டிககட்டுகள் மேற்கு ரயில்வே ஆகும்.