In massive data breach, details of over a million Aadhaar numbers published on Jharkhand govt website

 

ஜார்கண்ட்டில், ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களின் ஆதார் அடிப்படையிலான அனைத்துத் தகவல்களும் அம்மாநில அரசின் இணையதளத்தில், பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் ஒரு நபரின் வங்கிப்பரிவர்த்தனை உள்ளிட்ட தகவல்களை பதிவிறக்கம் செய்யும் வகையில், இவை வெளியிடப்பட்டிருப்பதால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஓய்வூதியதாரர்களது தனிப்பட்ட அடையாளம்,முகவரி உள்ளிட்ட தகவல்களை, எந்தத் தடையுமின்றி யாரும் பெற முடியும் என்ற வகையில் பகிரங்கமாக இவை வெளியிடப்பட்டுள்ளன.

 

அரசின் சலுகைகள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்காக ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குகளுடன் இணைத்ததாகவும், அதன் எதிரொலியாகவே இந்தத் தகவல்கள் பகிரங்கமாக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தத் தகவல்களை ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர் ஒருவர் பதிவிறக்கம் செய்ததுடன், இதுகுறித்து (Unique Identification Authority of India –UIDAI ) மத்திய அடையாளங்களுக்கான ஆணையத்திடம் கேள்வியும் எழுப்பி உள்ளார். ஆனால் இதுவரை யுஐடிஏஐ-யிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஏடு தெரிவித்துள்ளது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டதற்காக ஆதார் சேவையை அளித்து வந்த ஒரு நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்நிறுவனத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. இதேபோல் சட்டவிரோதமாக ஆதார் தகவல்களைத் திரட்டியதாக காவல்துறையில் கடந்த மாதம் மட்டும் மத்திய அடையாள ஆணையத்தின் சார்பில் 8 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில்தான் ஜார்கண்ட் மாநில இணையதளத்தில், ஓய்வூதியதாரர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜார்கண்ட் மாநில நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு இதுவரை அடையாள ஆணையம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஜார்கண்ட் மாநில அதிகாரிகளோ, சில நாட்களுக்கு முன்னர்தான் இந்த விவரம் தங்களுக்கு தெரியவந்ததாகவும், அவற்றைச் சரிசெய்யச் சொல்லி தொழில் நுட்பத்துறையினரிடம் கூறியிருப்பதாகவும் சர்வ அலட்சியமாக பதிலளித்திருக்கின்றனர்.

 

வருமானவரித்துறை கணக்குச் செலுத்துவோர் ஆதார் எண்ணை கட்டாயம அளிக்க வேண்டும் என்ற உத்தரவு சட்டப்படி சரியானதுதானா என்மபதை த்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றமே தெரிவித்திருந்தது.

 

இந்த நிலையில், தனிநபர் உரிமையில் தலையிடும் வகையில், ஒரு மாநில அரசின் இணையதளத்திலேயே, அவர்கள் தொடர்பான தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருப்பது, ஆதார் அடையாளத் திட்டத்தின் பாதுகாப்புத் தன்மை குறித்த அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.