மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை

Must read

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை  செய்து கொண்டுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜிதேந்திர காட்கே  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, மகாராஷ்டிரா அரசு அளித்துள்ள பதிலில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2017 ஜூன் மாதம் விவசாயிகளின் கடனை ரத்து செய்த பிறகும் 4,500 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதும் அரசின் தகவலின்படி தெரியவந்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ரூ. 34 ஆயிரம் கோடி விவசாய கடனை மகாராஷ்டிரா அரசு தள்ளுபடி செய்தும் தற்கொலை தொடர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு தெரிவித்த அரசு தெரிவித்த தகவலின்படி கடந்த 2017 ஜூன் மாதத்திலிருந்து 2017 டிசம்பர் மாதம் வரை 1,755 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2018-ம் ஆண்டு  2,761 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ரூ.34,022 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக அப்போது அறிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்,  இதன்  மூலம் மாநிலம் முழுவதும் 89 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த முடிவு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான மொத்த தற்கொலையில் 31% கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 2011 ஜனவரி முதல் 2014 டிசம்பர் வரை 6,268 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து 11 ஆயிரத்து 995 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

கடன், விளைச்சல் இல்லாதது, கடன் தொகையை கேட்டு நிர்பந்திக்கும் போது கொடுக்க இயலாதது, மகள் கல்யாணத்துக்கு பணம் திரட்ட முடியாது, மத வழிபாட்டுக்கு பணம் இல்லாதது, உடல் நலம் பாதிப்பு, மதுவுக்கு அடிமை மற்றும் சூதாட்டம் ஆகியவை, விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் என கடந்த 2015-ம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

 

More articles

Latest article