டில்லி
காஷ்மீரில் ஆபாசப்படங்களை பார்க்க இணையம் பயன்படுத்தப்படுவதாக நிதி அயோக் உறுப்பினர் வி கே சரஸ்வத் கூறி உள்ளார்.
திருபாய் அம்பானி தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப கல்வியக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது . இதில் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தரும் நிதி அயோக் உறுப்பினருமான வி கே சரஸ்வத் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். அப்போது சரஸ்வத் இடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
வி கே சரஸ்வத், “காஷ்மீர் மாநிலத்துக்குச் செல்ல ஏன் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்? அவர்கள் டில்லி சாலையில் நடக்கும் போராட்டங்களை காஷ்மீரிலும் நடத்த விரும்புகின்றனர். அவர்கள் சமூக ஊடகங்களை தங்கள் போராட்டத்துக்கு உதவியாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே அவர்களுக்கு இணையச் சேவை இல்லை எனில் பயன் ஏதும் இல்லை.
காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு இணையத்தின் தேவை எதற்கு எனத் தெரியுமா? அவர்கள் இணையத்தை எதற்குப் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியுமா? அவர்கள் இணையத்தை ஆபாசப்படம் பார்க்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். வேறு எதற்கும் அவர்கள் அதைப் பயன்படுத்துவது கிடையாது. எனவே அங்கு இணையச் சேவை இல்லாததால் பொருளாதாரத்தில் எவ்வித மாற்றமும் உண்டாகாது என நான் கூறுகிறேன்.
காஷ்மீரில் இணையச் சேவை முடக்கப்பட்டது. ஆனால் அந்த சேவை குஜராத்தில் உள்ளதா? காஷ்மீரில் இணையச் சேவை முடக்கம் என்பதே வேறு. காஷ்மீரில் விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீரை முன்னேற்ற விரும்பும் போது இது போலச் சேவைகளைச் சிலர் பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் அதிகம் உள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.