மடிகேரி

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கர்நாடக அரசு 60 வயதைத் தாண்டியோர் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது.

கொரோனா துணை மாறுபாடு JN.1 பாதிப்புகள் கேரளாவில் அதிகரித்து வரும் நிலையில், சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்கள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

நேற்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மடிக்கேரியில்  நிருபர்களிடம்,

“கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன். இதில் கொரோனாவை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். சில ஆலோசனைகளை அந்த குழு வழங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்கள், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதுகுறித்த வழிகாட்டுதல் இன்றே (நேற்று) பிறப்பிக்கப்படும். 

மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கொரோனா பரவலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். கேரளாவின் எல்லை மாவட்டங்களான குடகு, மங்களூரு, சாம்ராஜ்நகர் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளேன். கேரளாவில் இருந்து வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். 

மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போது தான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என்பது தெரியவரும். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கேரளாவை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்” 

என்று தெரிவித்துள்ளார்.