கோவா:
மத்திய அரசின் மாட்டு இறைச்சி தடை உத்தரவுக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வகையில் கோவாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து போராட தொடங்கியுள்ளனர்.

முஸ்லிம்களும், ஆர்சி கிறிஸ்வ தேவாலயமும் இணைந்து ‘‘ மாட்டு இறைச்சிக்காக கோவா& கோவாவுக்காக மாட்டு இறைச்சி என்ற புதிய பொது சமுதாய அமைப்பை உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கோவாவில் உள்ள குவரெஷி இறைச்சி வர்த்தக சங்கம் சார்பில் மும்பை உயர்நீதிமன்ற கோவா அமர்வு முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘‘கால்நடை விற்பனை தொடர்பாக கடந்த மாதம் 26ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவில் மத்திய மாநில அரசுகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் இந்த உத்தரவால் கோவா மாநில இறைச்சி தொழில் மற்றும் சுற்றுலா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மனோகர் பாரிக்கர் அமைதியாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இறைச்சி வர்த்தகர் சங்க பிரதிநிதியான அவ்னர் பெபாரி கூறுகையில், ‘‘இந்த அறிவிப்பு எங்களுக்கு மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத அடிப்படையிலான நம்பிக்கைக்கு இது எதிரானதாகும். இன்னும் இரண்டு மாதத்தில் பக்ரீத் பண்டிகை வரவுள்ளது. இந்த புதிய அறிவிப்பால் பிரச்னைகள் எழ ஆரம்பித்துள்ளது’’ என்றார்.

கடந்த ஜூன் 1ம் தேதி முதல் கோவா&கர்நாடகா எல்லையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த அமைப்பு கோவாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் முஸ்லிம் சமுதாய பிரதிநிதி அப்துல் மதின் என்பவர் கூறுகையில், ‘‘மாட்டு இறைச்சி தொடர்பாக மாநில அரசு எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை. அதன் பிறகு தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதர மாநில அரசுகள், முதல்வர்கள் மாட்டு இறைச்சி தடைக்கு எதிராக கடிதங்கள் எழுதி வரும் நிலையில் கோவா அரசின் செயல்பாடு எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியது’’ என்றார்.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சேவியோ பெர்ணாண்டஸ் கூறுகையில், ‘‘இதன் பின்னரும் நாங்கள் அமைதியாக இருந்தால் அது எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும். தேவாலய நிர்வாகம் தான் இந்த அமைப்புக்கான அலுவலகமாகும். இதில் முஸ்லிம் பிரதிநிதிகள், கோவா இறைச்சி வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

நாட்டின் மதசார்பின்மையை தாக்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து போராட நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். எங்களது தேவைக்கு ஏற்ப நாங்கள் போராட உரிய நேரம் வந்துள்ளது. இது தொடர்பாக இரு பிரிவினரும் நிறைய பேச வேண்டியுள்ளது. மாட்டு இறைச்சி விலை குறைந்த உணவாக கோவாவில் உள்ளது. வார இறுதி நாட்களில் பெரும்பாலான வீடுகளில் பிரத்யேக உணவாக மாட்டு இறைச்சி விளங்குகிறது’’ என்றார்.

கோவாவில் உள்ள பல ஓட்டல்களில் ‘‘ இங்கு மாட்டு இறைச்சி விற்பனை செய்யவில்லை’’ என்று அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.